*LIFE HISTORY OF MAHAMAHOPADHYAYA SRI PAINGANADU GANAPATI SASTRI – PART 4*
*மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள் சரிதம் *
இதற்குப் பிறகு திரு கணபதி சாஸ்திரிகள் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார்;
*அத்வைத மஞ்சரி, கச்சபி பட்டம், வேதாந்த கேஸரி பட்டம், காஞ்சி ஆசார்யாளுக்கு ஆசிரியர் *
இப்படி இருக்கும்பொழுது கோனேரிராஜபுரம் என்னும் சிற்றூரில் சாம்பசிவ ஐயர் என்ற மஹான் வசித்து வந்தார். ஸம்ஸ்க்ருதத்தை பரப்புவதில் ஈடுபட்டிருந்த திரு சாம்பசிவ ஐயர், அந்த ஊரில் உள்ள ஸ்ரீவித்யா அச்சகத்தில் பதிப்பாசிரியராக இருந்தார். வேதாந்த சாஸ்திரத்தைப் பரப்புவதற்காக அச்சிட்டு இருந்த அத்வைத மஞ்சரி முதலிய ஏடுகளை ஒப்பு நோக்குவதற்காகவும் வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காவதும் துணை செய்பவர்களைப்பெற திரு ராஜு சாஸ்திரிகளை மன்னார்குடி சென்று திரு சாம்பசிவ ஐயர் வணங்கி நின்றார். திரு ராஜு சாஸ்திரிகள் தமது மாணவரான கணபதி சாஸ்திரிகளை இதற்காக நியமித்தார். விருப்பம்போல் திரு சாஸ்திரிகள் கோனேரிராஜபுரம் சென்று ‘அத்வைத மஞ்சரி’ முதலிய ஏடுகளை அச்சிட ஈடுபட்டதுடன் பல்வேறு சாஸ்திர ஏடுகளைப் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்டு கல்வி அறிவு வழங்கினார். அங்கு மனோரஞ்சககமாகவும், அறிவொளி வளர்ப்பதாகவும் உள்ள பல காப்பிய, நாடக நூல்களை இயற்றினார்.
வடநாட்டிலிருந்து வந்த சிறந்த யோகிகளிடம் இருந்து வைத்ய, யோக சாஸ்திரங்களைப் பயின்றார். பழமானேரி ஸ்வாமிகளிடம் இருந்து வேதாந்தத்தில் மேல்படிப்பு படித்தார்.
1892-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் துலாபார மஹோத்ஸவம் தொடர்பாய் நடந்த அறிஞர் அவையில் பங்கு கொண்டு பேரறிஞர்களால் பெருமை படுத்தப் பட்டார். இவருடைய த்ருதமாக கவி பாடும் திறமையைக் கண்டு கொச்சி அரசர் திரு. ராமவர்மா, *’கச்சபி ‘ * என்ற பட்டத்தை வழங்கினார். 1900-ம் ஆண்டில் ஹூப்ளி நகரத்தில் நடந்த சங்கராச்சாரிய உத்சவ மண்டலியில் ஒன்று சேர்ந்த அறிஞர்களை துவாரகா மட அதிபதிகளான ஸ்ரீ சங்கராச்சாரியார் அத்வைத வேதாந்தம் குறித்து சில நுட்பமான ஏழு கேள்விகள் கேட்டார்கள். அறிஞர்கள் பலரும் அந்த ஏழு கேள்விகளுக்கு பதில் எழுதி மடாதிபதிகளுக்குக் கொடுத்தார்கள். ஆனால், அதில் திரு கணபதி சாஸ்திரிகள் எழுதிய விரிவான மேற்கோள்களுடன் கூடிய அறிவுபூர்வமான பதில் மிகவும் சிறப்பாக இருந்தது என்று ஸ்ரீ துவாரகா மடாதிபதிகள் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் மகிழ்ந்து *’வேதாந்த கேசரி ‘ * என்ற பட்டத்தையும் வழங்கிப் பெருமை செய்தார்கள்.
திரு சாஸ்திரிகள் 1901-ம் ஆண்டு அத்வைத சபையில் அங்கம் வகித்தார். அது முதல் பத்து ஆண்டு காலம் அத்வைத சபையை நடத்துவதில் முக்கிய பங்கு கொண்டார். 1905-ம் ஆண்டு, திரு சாஸ்திரிகள் ஸ்ரீ காமகோடி பீடத்தில் ஆஸ்தான அறிஞராகப் பதவி ஏற்றார்கள். திரு சாஸ்திரிகள் காமகோடி பீடாதிபதிகளான அருள்மிகு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு காப்பியங்களையும், சாஸ்திரங்களையும் கற்பிக்கும் பெரும் பாக்கியத்தை அடைந்தார்கள். இந்த சமயத்தில் அந்த மடத்தில் பகவத் கீதை, ஞான வாசிஷ்டம், ஸூதஸம்ஹிதை ஆகிய ஏடுகளைப்பற்றி பல சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றினார்கள்.
இந்த சமயத்தில், பால சன்யாசியான காஞ்சி ஆசார்யாளுக்கும் ஆசிரியரான கணபதி சாஸ்திரிகளுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடுத்த பதிவில் அனுபவிப்போம்.
*TO BE CONTINUED*
Leave a Reply